Sunday, May 24, 2009

நெடுங்கதையின் சுருக்கம் - 2

அவரது கரிசனத்தை நம்பி நான் இருக்கக் கூடாது. நான் சுயமாக மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் எங்கள் உறவு ஆரோக்கியமாக இருக்கும்' என்று உறுதி பூண்டு பல்லைக் கடித்துக் கொண்டு பணியில் கவனம் செலுத்தினாள். இன்னொரு ஊரில் இருந்த அலுவலகத்தின் கிளைக்கு மாற்றல் கிடைத்து சம்பளமும் இரண்டு மடங்காக உயர்ந்தது.

அங்கு தங்குவதற்குக் கிடைத்த இடத்தில் ஒரு வெளிநாட்டுத் தம்பதி. அந்தப் பெண்மணிக்குக் குழந்தை பிறக்க இருந்தது. அவர்கள் வீட்டில் கட்டண விருந்தாளியாக பலரை நேர்முகம் கண்டு இவள் அவர்கள் மனதுக்குப் பிடித்துப் போனாள். ஏற்கனவே அக்காவின் குழந்தைப் பிறப்பில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் மனதில் இருத்தி எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருந்தாள். புதிய அலுவலகத்தில் வேலையில் இறங்கி விடவே இல்லை. முதல் அலுவலகத்தில் ஆரம்பத்தில் செய்த சாதனைகள் எல்லாம் கடைசி ஆண்டுகளில் கொஞ்சம் சறுக்கும் போது கை கொடுத்தன். இங்கோ ஆரம்பத்திலிருந்தே கெட்ட பெயர்தான்.

மோகனோ உள்ளும் வெளியுமாக அலைக்கழிந்து கொண்டிருந்தார். இவளையும் அலைக்கழித்தார். அலுவலகப் பணி, நட்பு, மனதுக்கு நிறைவளிக்கும் சின்னஞ்சிறு ஒரு உயிர் என்று மூன்று படகுகளில் கால் வைத்து இழுபட்டுக் கொண்டிருந்தாள்.

அலுவலகப் பணியில் சாண் ஏறினால் முழம் சறுக்கம் என்று வீழ்ச்சி மட்டும் தொடர்கதையாக இருந்தது. அதில் கவனம் செலுத்த மனமே வரவில்லை. அதற்கு மூன்றாவது இடம்தான். இந்த ஐரோப்பியக் குழந்தைக்கு நினைவு தெரிய ஆரம்பித்த பிறகு இவள் அவ்வளவு தேவையாக இல்லை. குழந்தையின் தேவைகளை இவளால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. இடைவெளி வளர்ந்து கொண்டே போனது. 'இது என்ன பெரிய விஷயம். எல்லா இடத்திலும் மனிதர்கள் ஒன்றுதான். இந்தக் குழந்தைக்கு நான் பணி செய்ய முடியாதா என்ன. அன்பு மட்டும் இருந்தால் எதையும் சாதித்து விடலாம்' என்று விடாப்பிடியாக முயன்று கொண்டிருந்தார்கள்.

குழந்தையின் பெற்றோரும் பொறுமையான புரிவுணர்வுடன் இவளுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த வகையில் இவளுக்கு உதவி செய்தார்கள். அது நிச்சயமாக போதுமானதாக இருக்கவில்லை. 'இப்படி ஒவ்வொரு குழந்தைக்குப் பின்னால் ஓடிக் கொண்டே இரு' என்று நாளொரு சச்சரவும் பொழுதொரு தொலைபேசி சண்டையுமாக உறவு வலுவிழந்து கொண்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளில் குழந்தைக்கு தான் எந்தவிதத்திலும் உதவியாக இல்லை என்று இவளுக்கு உறைத்தது. குழந்தையின் அம்மாவுக்கும் தெரிந்தது. தொடர்பை வெட்டுவதை அந்த அம்மாவே செய்தார். 'ஓரிரு மாதங்களில் நாங்கள் எங்க ஊருக்குத் திரும்பப் போறோம். அதுவரை நீதான் குழந்தையை பார்த்துக்கணும்' காரணங்கள் என்னவென்று இரண்டு பேருக்குமே புரிந்தது.

'நானா இருந்தால் அப்படிச் சொன்ன அந்தக் கணமே பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பியிருப்பேன். வெட்கங்கெட்ட பெண் நீ. அதற்குப் பிறகும் அவங்க வீட்டில் தங்க உனக்கு எப்படி மனசு வந்தது'. காயப்படுத்துகிறோம் என்று தெரியாமலேயே ஒருவர் பேசுவாரா என்ன! உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தாள்.

அலுவலகத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து மூட்டை கட்டச் சொல்லி விட்டார்கள். கிட்டத்தட்ட ஆரம்ப கட்டத்தில் வந்து விட்டிருந்தாள். 'எது போனாலும் போகட்டும். எனக்கென்று ஒரு துணை இருக்கிறதே. அவர்களது கனவு வீடு முழு உருப்பெற்று நனவாகி எழுந்து நின்றது. அதைப் பார்க்கும் போது பூரித்துப் போனது.

' எல்லாம் கெட்டுப் போனாலும், சாகும் வரை துணையென்று இருக்க ஒரு இணை இருக்கிறாரே' என்று திருமணம் செய்து கொள்ளும் முயற்சிகளை ஆரம்பித்தாள். அவருக்கு என்ன கட்டாயமோ, இழுத்த இழுப்புக்கு வந்து கொண்டிருந்தார், சிலசமயம். பல சமயம் வன்மையான எதிர்ப்புகள், கருத்து வேறுபாடுகள். என்ன நடந்தது என்று திரும்பிப் பார்க்கக் கூடத் தவிர்க்க நினைக்கும் அளவில் திருமணம் நடந்து முடிந்தது. அதில் உடைந்த கனவுகள், சரிந்த கோட்டைகள் ஏராளம்.

திருமண வாழ்க்கை ஆரம்பித்தது. இவ்வளவு நாள் 'காதலித்து'க் கைப்பிடித்ததாலோ என்னவோ தேன்நிலவு காலம் என்றெல்லாம் கூட தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே சலிப்புத் தட்டியிருந்தது அவருக்கு. காதல் உயிர்ப்புடன் இருக்கிறதோ இல்லையோ இயற்கையின் நடப்புகள் நடந்து கொண்டே இருந்தன. வேறு ஏதாவது நிறுவனத்தில் சேருவதற்கு முயற்சிகள் எதுவுமே எடுக்கவில்லை. 'நம்முடைய வருமானத்தை இவர் எதிர்பார்ப்பாரா என்று தெரியவில்லையே! அதை விடுவோம். வீட்டை நல்லபடியாக வைத்து அவருக்கு குறை இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.'

அவரது அலுவலகப் பணிகளுக்கு நான் எப்படி உதவ முடியும். அலுவலக நண்பர்களுக்கு விருந்து அளிக்க அவருடன் பேசி உற்சாகமாக ஏற்பாடுகள் செய்தாள். அவருடன் பேசி என்னென்ன மாதிரி உதவிகள் வேண்டும் என்று கேட்டுக் கேட்டுச் செய்தாள். அலுவலக வாழ்க்கையில் வெற்றியடைந்தால் அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி என்னிலும் திரண்டு விடாதா என்று தன்னை அதில் மூழ்கடிக்க ஆரம்பித்தாள். பணி அவருடையதா அல்லது இவளுடையதா என்று சண்டை போட்டுக் கொள்ளும் ஒரு கட்டம் வந்து விட்டது. தான் வெளியாள்தான் என்பது உறைக்கவே இல்லை அவளுக்கு. பைத்தியம் போல ஓடிக் கொண்டிருந்தாள்.

உள்ளத்தில் ஏமாற்றங்களுடனும் வெறுமையுடனும் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. வயிற்றில் ஒரு உயிர் அசையும் உணர்வும் கனவும் கற்பனையும் எண்ணங்களும் உடலைத் தழுவின. சில நாட்களுக்கு உறைக்கவேவில்லை. நாமும் ஒரு தாயாக முடியுமா! குழந்தைகள் குழந்தைகள் என்று உருகிக் கொண்டிருந்த நாம் இதுவரை நமக்கு ஒரு குழந்தை என்று நினைத்துப் பார்க்கவே இல்லையே! என் வயிற்றிலும் ஒரு உயிர் உருவாகிறது!

அதற்குக் காரணமான கணவரின் மீது அன்பு பொங்கியது. அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று உறுதிமொழிகள் முழைத்தன. அவர் விட்டேற்றியாக இருந்தார். 'என்ன வேணும்னாலும் செய். எனக்கு வேண்டியதை குறைத்து விடாதே' என்று சொல்லாமல் சொன்னார். முற்றிலும் நோகடிக்கும் நேரங்களில் மட்டும் உதவுவதாக வந்து இவளிடமிருந்து சுடு சொல் வாங்கி காயப்பட்டு ஒதுங்கினார். 'பிறக்கும் குழந்தைக்கும் எனக்கும் தொடர்பே வேண்டாம்' என்று ஒதுங்க ஆரம்பித்தார்.

'இப்போ உங்க பணி வாழ்க்கைக்கு தொந்தரவா இருக்கும் என்றால் இந்தக் கருவை வேணும்னா கலைச்சுரலாம். அப்புறம் நமக்கு குழந்தையா பிறக்காமல் போய் விடும்' தனக்குத் தெரிந்த வழியை மூச்சைப் பிடித்துக் கொண்டு சொல்லிப்பார்த்தாள். சொல்வதில் நம்பிக்கையே இல்லாமல் பேசுவது அவருக்கு வெள்ளிடை மலையாகத் தெரிந்தது. 'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அப்புறம் வாழ்நாள் முழுசும் என் குழந்தையை கலைக்கச் சொன்ன பாதகன் என்று பேச்சுக் கேட்க வேண்டி வரும். ஒன் விருப்பப்படியே பெத்து வளர்த்துக்கோ' மூச்சு விட முடிந்தது.

இவளது வாழ்வும், பேச்சும், மூச்சும் வயிற்றில் வளரும் குழந்தையைச் சுற்றி வர ஆரம்பித்தது. வீட்டு வேலைகளை செய்ய உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டாள். குழந்தைக்கு சரியாக சாப்பாடு கிடைக்க வேண்டுமே, அதற்கு பார்த்துப் பார்த்துக் கடைக்குப் போய் பரிந்து பரிந்து ஊட்டினாள், வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு. தனக்குப் பிடிக்காத உணவுகளைக் கூட குழந்தைக்கு வேண்டுமே என்று சாப்பிட்டுக் கொண்டாள்.

அவருக்குக் கிடைக்கும் நேரம் குறைந்து கொண்டே வந்தது. அவர் வேறு உறவுகளைத் தேடிக் கொண்டார். அவரது அலுவலகப் பணிகளில் மூழ்க ஆரம்பித்தார். அலுவலக நட்பு ஒரு பெண்ணின் வீட்டில் நண்பர்களின் கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. இவள் தன் குழந்தைக்கு கொடுத்த நேரம் போக மீதி கணவனுக்கு உதவி செய்ய முற்பட்டு அது அவருக்கு இன்னும் ஆத்திரத்தை வரவழைக்க ஆரம்பித்தது.

வீட்டில் அது சரியில்லை, இது சரியில்லை என்று வாக்குவாதங்கள் முளைத்தன. இந்த நேரத்தில் சம்பாதிக்கவும் முடியாமல் வீட்டில் குழந்தை பெற உட்கார்ந்து விட்ட இவள் மீது மோகனுக்கு ஆத்திரம் அதிகம். அதை சரிவர வெளிப்படுத்த முடியாமல் அவ்வப்போது வன்முறையாக வெடித்துக் கொண்டிருந்தது.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home