Sunday, May 24, 2009

2020-05-23

நேரம் ஒன்பது மணி 40 நிமிடங்கள். ஒரு வாரத்துக்கு இடைவிடாமல் வேலைகளில் மூழ்கியிருந்து விட்டு இன்றைக்குக் கொஞ்சம் இளைப்பாறுதலாக எழுந்திருந்து காலை உணவு சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருக்கிறேன். நேற்றைக்குக் காலையில் நான்கு மணிக்கு எழுந்து விட்டிருந்தேன். காலையில் எழுந்ததும் வழக்கம் போல காலைக் கடன்களை முடித்து விட்டு நாட்குறிப்பு எழுத உட்கார்ந்தேன். முந்தைய நாளில் நடந்தவை, நாளிதழில் படித்தவை, நேற்றைக்குரிய திட்டங்களையும் எழுதி முடிக்கும் போது மணி ஐந்தரை மணி அடித்து விட்டிருந்தது.

கீழ்த்தளத்தில் யாரோ எழுந்து விட்டது போல ஓசைகள் கேட்டன. எனக்கும் சூடாக ஏதாவது குடிக்கலாம் என்று தோன்றவே, கீழிறங்கி அடுக்களைக்குள் போனேன். பின் கதவைத் திறந்து தோட்டத்துக்குள் நுழைந்தேன். இன்றைக்கு வெண்டைக்காய்கள் சரியான பருவத்தில் வந்து விட்டிருப்பதாகத் தோன்றியது. அவற்றைப் பறித்து காய் கூடையில் வைத்துக் கொண்டேன். தக்காளிக் காய்களாகவே பறித்து பச்சடி செய்யலாம் என்றும் ஒரு எண்ணம் வர பச்சையாக இருந்த தக்காளிக் காய்களும் கூடைக்குள் போயின.

முந்தைய நாள் நன்கு வெயிலடித்திருந்ததால் சுடுதண்ணீர் நிறைய நிரம்பியிருந்தது. இன்றைக்கு சூரிய சக்திக் கலனின் சூட்டை இழக்காமல் தடுக்கும் பூச்சை மேம்படுத்துவதற்கு தொலைபேச வேண்டும். சுடுதண்ணீரை ஒரு பீங்கான் கோப்பையில் பிடித்து, அரைத்து வைத்திருந்த துளசி, சுக்குப் பொடியையும் சிறிதளவு தேனையும் சேர்த்து சூடாகக் குடித்து விட்டு அடுத்த வேலை.

அங்கங்கு விலகியிருந்த பொருட்களை எல்லாம் அதனதன் இடத்தில் வைத்து விட்டு, இரண்டு நாட்களாக அழுக்காகி இருந்த துணிகளை சலவை எந்திரத்தில் போட்டுக் கொண்டேன். மின்கலனில் மின்சார அளவு நாள் முழுமைக்கும் போதுமானதாகத்தான் தெரிகிறது. இன்றைக்கும் எல்லா வேலைகளையும் முடித்துக் குளித்து தியானமும் செய்த பிறகுதான் வெளியுலகச் செய்திகளை உள்ளே விட வேண்டும். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இயக்கியைப் பயன்படுத்தி தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்து விட்ட நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மட்டும் குறையவேவில்லைதான்.

வீட்டு வேலைகளை முடித்து விட்டுக் குளித்து விட்டு வெளியில் வரும் போது கார்த்திக்கும் எழுந்து விட்டிருந்தான். அவன் அடுத்த தெருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க காலையில் போகும் நாள். அவனுக்குக் குடிப்பதற்கான பானமும் சில நிமிடங்களில் தயாரித்து விட்டு மள மளவென விளையாட்டு உடைகளை மாட்டி விட்டு தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு பாய்ந்து விட்டான். இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு ஆளைப் பார்க்க முடியாது.

மதி இன்றைக்கு அமெரிக்க கலாச்சார மையத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான தயாரிப்புகளைச் செய்து முடித்திருந்தாள். ஒன்பதரை மணிக்கு அண்ணா சாலைக்குப் போக வேண்டுமானால், இப்போதே எழுந்தால்தான் புறப்பட்டு தொடர்வண்டியைப் பிடித்துப் போகச் சரியாக இருக்கும். குரல் கேட்டதும் தூக்கத்திலும் அவளுக்கு கருத்தரங்கு நினைவு வந்து விட்டது. முகம் மலர புன்னகைத்துக் கொண்டே எழுந்து விட்டாள்.

அத்தோடு அறைக்குள் போய் தியானத்தில் உட்கார்ந்தேன். இன்றைக்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாக எழுந்து விடக் கூடாது என்ற உறுதியுடன் உட்கார்ந்திருந்தாலும் உட்கார்ந்த சிறிது நேரத்தில் வித்யா எழுந்து விட்ட ஓசைகள் கேட்க ஆரம்பித்து விட்டன. தியானத்தில் உட்கார்ந்திருக்கும் போது தொந்தரவு செய்து விடக் கூடாது என்ற கவனத்துடன் நடமாடிக் கொண்டிருந்தாலும், அவளது மனது விழித்ததும் எனக்குள்ளும் ஒரு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அவள் தலைமைப் பொறுப்பு வகிக்கும் நகரக் குழுவின் கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. 45 பேர் கலந்து கொள்ளும் கூட்டம். அதற்கான தயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டும்.

அதிகம் சலனப்படாமல் தியானத்தைத் தொடர்ந்தேன். இன்றைக்கு எப்படியாவது பொருள் வாங்கியவர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு உள்ளிடும் கருத்துக்களை தனியாகத் தொகுத்துக் காண்பிக்க வேண்டும் என்ற தேவையை நிறைவேற்றி விட வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. மாலை 7 மணிக்கு அமைச்சரவையின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் கல்விச் சீர்திருத்தங்களை ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்துவதற்கான திட்டக்குழுவின் உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு முதல் கூட்டம்.

காலையில் ஜப்பானில் காஃபி என்று பழைய திரைப்படப் பாடல் ஒன்று வரும். அது போல வீட்டுக்குள் இருந்து கொண்டே நான்கு கண்டங்களில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் விவாதங்கள் நடத்தி விட முடிகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் விண்வெளியில் குடியிருப்பு அமைக்கும் செயல்திட்டம் ஒன்றையும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

தியானம் முடிக்கும் போது மணி 8 ஆகியிருந்தது. படிக்கும் அறைக்குள் வந்து செய்தித் தளங்களை இயக்கினேன். இதைப் படித்து விட்டு நியூ கினியா நாட்டைப்பற்றிய விபரங்களைப் பார்க்க வேண்டும். தமிழ்ஈழத்தில் நடக்கப் போகும் உலகத் தமிழ் மாநாடு குறித்த செய்திகளை மேய்ந்து விட்டு வலைத்தளத்தில் எழுதியவற்றை பதிந்து விட்டேன். உலகத் தமிழ் மாநாட்டை தொலைதொடர்பாக நடத்தாமல் பங்கேற்பவர்கள் எல்லோரும் நேரில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்கிறார்கள். அத்தனை ஆண்டுகள் போரில் அவதிப் பட்ட மக்கள் உருவாக்கிய சாதனைகளை உலக தமிழ் சமூகம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். அதே மாநாட்டின் parallel அமர்வுகளாக சிங்கள மொழி வளர்ப்பு மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

28ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை மூன்று நாட்கள். போக வேண்டும் என்றுதான் ஆசை. மூன்று நாட்கள் விடுமுறை ஆகி விடும். மற்ற பணிகளை எல்லாம் காத்திருக்கச் சொல்லி விடலாம்.

ஒன்பதரை மணிக்கு தொழில் நுட்ப ஆய்வுக் கூட்டம். அது சீக்கிரமாக முடிந்து விட்டால் மதியின் கருத்தரங்கையும் பார்த்துக் கொள்ளலாம். கருத்தரங்கை ஒரு திரையில் ஓட விட்டுக் கொண்டேன். அமைப்பாளர்கள் அரங்கில் நாற்காலிகளை அமைத்திருந்தார்கள். இது போல நேரடி விவாதங்களுக்கு செய்ய வேண்டிய பணிகளின் சிக்கல் மட்டும் குறைந்தபாடில்லை. ஒன்பதரைக்குள் ஒவ்வொருவராக ஆய்வுக்கூட்டத்துக்கு வந்து விட்டார்.

விண்வெளியில் தளம் அமைக்கும் போது இணையத்துடன் எப்படிப்பட்ட தகவல் பரிமாற்றம் இருக்கும் என்று தான் தயாரித்திருந்த விபரங்களைச் சுருக்கமாக விளக்கினார். மூன்று மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் பயணத்தில் கலந்து கொள்ளப் போகும் தயாரிப்புகளைக் குறிப்பிட்டு அதற்குள் நமது பயன்பாடுகளை விண்வெளியில் பயன்படுத்தும்படியாக செய்து விட வேண்டும் என்று சொன்னார். தான் தயாரித்திருந்த புதிய இடைமுகங்களைக் காண்பித்ததும் வேலை நிறைவாகப் போவதாக நம்பிக்கை ஏற்பட்டது.

அரை மணி நேரத்தில் கூட்டம் முடிந்து விட கருத்தரங்கு ஒலியை உயர்த்தினேன். நிறுவன காட்சித் திரையில் கூட்டத் திரை நகர்ந்து பொதுப்படையாக வைத்திருந்த கணினித் திரைகள் ஓட ஆரம்பித்தன. கருத்தரங்கில் அறிமுக உரைகள் மூன்று முடிந்து மதிக்கு முந்தைய உரையாளர் பேச ஆரம்பித்திருந்தார். வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று அடிக்குறிப்பு. இன்றைக்கு மொழி மாற்றத்தின் தரம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக வங்காள மொழியிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் போது பலருக்கு சறுக்கி விடுகிறது. புதிய மொழிமாற்றி இன்றுதான் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ் ஒலிபரப்பை மாற்றி வங்காள மொழியில் அவர் பேசுவதை ஒலிக்க விட்டேன். காதில் தேமதுரம் பாய்வது போன்ற உணர்வைத் தரும் மொழி. அவரது குரல் தமிழிலும் நன்கு ஒலிக்கிறது. உரையை மொழி மாற்றம் செய்து, பேசுபவரின் குரலிலேயே விரும்பிய மொழியில் கேட்டுக் கொள்ளும் வசதி பெரிய வரப்பிரசாதம்தான்.

மதி இந்தியில் ஆரம்பித்தாள். இந்தியில் முதுகலை படித்துக் கொண்டிருந்தாள். இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் இயக்கி அவள் எழுதி வெளியிட்டது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. அவளது குரல் மட்டுமில்லாமல் மனமும் ஒலிப்பதாகத் தோன்றுவதற்கு இன்னும் ஒரு காரணமாகப் போய் விட்டது. நான் கருத்தரங்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தனது கைக்கணினியில் குறித்துக் கொண்டாள். வித்யாவும் தனது தயாரிப்புகளுக்கு நடுவில் இங்கு கணினியைத் திருப்பியிருக்கிறாள். இரட்டை மகிழ்ச்சி.

கார்த்திக் வெளியிலிருந்து வந்தவன். எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டான். எத்தனை தடவை சொன்னாலும் கேட்பதில்லை. 'நீ கலந்து கொள்வதோடு இல்லாமல், கலந்து கொண்டாய் என்று பதிவு செய்யும் படி உன்னுடைய முகவரியிலிருந்து கலந்து கொள்ள வேண்டும்' என்று சொல்வது ஒரு பொருட்டே இல்லாமல் போய் விட்டது. விளையாடிக் களைத்து ஜொலித்துக் கொண்டிருந்த முகத்தைப் பார்த்து வாதம் ஆரம்பிக்க மனம் வரவில்லை. 'நான் எனக்காகப் பார்க்கிறேனா, அடுத்தவர்களுக்குக் காட்டிக் கொள்வதற்காகப் பார்க்கிறேனா' என்று ஒரு வீம்பு.

வித்யாவுக்குத் தெரிந்தால் ஒரு குட்டி போர்தான் நடக்கும். அவள் இருக்கும் வேலை நெருக்கடியில் இந்த நேரத்தில் இங்கு எட்டிப் பார்ப்பது சாத்தியக் குறைவுதான். மதியின் கருத்துச் சிதறல்கள் அறையை நிறைக்க ஆரம்பித்தன. நேற்று இரவில் எனக்குப் படிக்க அனுப்பியிருந்த பதிப்பிலிருந்து மேலும் பல மாறுதல்கள் செய்து இன்னும் செதுக்கி விட்டிருந்தாள். 10 நிமிடங்களுக்கான உரை. ஆரம்பிக்கும் போது நேரடியாகக் கலந்து கொண்டிருந்த 15 பேரைத் தவிர வெளியிலிருந்து 20 பேர் இணைந்திருந்தார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான இணைப்புகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்று முனையம் காட்டியது.

இந்த நேரத்தில் நடக்கும் கருத்தரங்குகளுக்கு நல்ல வரவேற்பும் விளம்பரமும் கிடைக்கின்றன. அமெரிக்காவில் பின்மாலை, ஜப்பானில் பிற்பகல், சீனாவில் வேலை நேரம், மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை ஆரம்பிக்கும் பொழுது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும்தான் அதிகாலையாக இருக்கும். நிகழ்ச்சியைப் பற்றிய கருத்துக்கள் சூடுபிடிக்க லண்டனிலிருந்தும் பல இணைப்புகள் சரசரவென்று உள்ளே நுழைந்தன. இந்தப் பெண் இந்த வயதிலேயே இப்படிக் கட்டிப் போட்டு விடுகிறாளே என்று பெருமையாக இருந்தது.

சரியாக 10 நிமிடங்களில் முடித்து விட்டாள். அதற்குள் 3368 கருத்துரைகளும் 216 விளக்கத் தேவைகளும் வந்து விட்டிருந்தன. விளக்கத் தேவைகளில் பார்ப்பவர்களின் தெரிவில் முதல் 5 இடங்களைப் பிடித்த கேள்விகளுக்கு பாரதி பதில் சொல்வார் என்று அறிவிப்பு வந்தது. இன்னும் 5 நிமிடங்கள் அவளுக்குக் கிடைக்கிறது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் போது அங்கு பூமியில் இருப்பது போன்றே பல மொழிகள், பல கலாச்சாரங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவளது கருத்துரையின் அடிப்படை. அது தொடர்பாக இருந்த ஐயங்களும், பதற்றங்களும் கேள்விகளில் நன்றாகவே தெரிந்தன. அப்படித் திட்டமிடுவதால் குடியேற்றத்துக்கான செலவுகள் 3% மட்டுமே அதிகமாகும் என்ற கணக்கீடுகள் எல்லோரையும் அசைத்துப் போட்டு விட்டது தெரிந்தது. இந்த ஆராய்ச்சியுரையின் முடிவால் குடியிருப்பில் கலந்து கொள்ள முன்வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கப் போகிறது.

அது ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்க நிறுவனத் திரையிலும் உரையாடல் வேண்டுகோள்கள் நிறைந்து விட்டிருந்தன. அடுத்த சனிக்கிழமை டோக்கியோவில் நடக்கும் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள முடியுமா? நேரடி விழாக்களில் கலந்து கொள்வதை முடிந்த வரை தவிர்ப்பது என்று முடிவு செய்திருந்தாலும் இது போன்ற வேண்டுகோள்கள் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நேரடியாகக் கலந்து கொள்ள முடியா விட்டாலும், அவர்கள் விழாவுக்கு எனது கருத்துரையை அனுப்புகிறேன் என்று பதில் அனுப்பியதும் ஒரு பெரிய 'ஹூர்ரே' காதை அறைந்தது. இது போல வலுக்கட்டாயமாக ஒலி அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்ற கோட்பாட்டை அவ்வப்போது உடைப்பதும் தேவையாகத்தான் இருக்கிறது. 216 பேர்களும் ஒரே நேரத்தில் கூச்சல் போடுவது தொழில்நுட்பத்தின் அற்புதம்தான்.

வெளியில் வெயில் ஏற ஆரம்பித்திருந்தது. அறையில் வெப்பநிலையை பராமரிக்கும் கருவியின் ஹம் ஓசை இன்னும் ஒரு ஜதி உயர்ந்தது.

0 Comments:

Post a Comment

<< Home