Sunday, May 24, 2009

2020-05-25

மே மாதம் 25ம் தேதி. காலை மணி 7.

நான்கு மணிக்கு முன்பே விழிப்பு வந்து விட்டிருந்தாலும் ஐந்து மணிக்குத்தான் எழுந்திருந்தேன். முந்தைய நாள் ஏழரை மணிக்குப் பிறகு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். பழைய நண்பர்கள், உறவுகள், நிறுவன சக ஊழியர்கள் எல்லோரையும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

கடைசியாக அழைத்தவரை தொழில் முறையில் அறிமுகம். என்னுடைய வலைப்பதிவுகளைப் படித்து நண்பராகி நிறுவனம் நடத்துவதில் உள்ள சிரமங்களைப் பகிர்ந்து கொள்பவராக இருந்தார். நேற்று தொடர்பு கொள்ளும் போது உற்சாகமாக இருந்தார். அடுத்த வாரம் தமிழ்ஈழம் போவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறாராம். வைகோ தலைமையில் அவர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்து கொள்ளப் போகிறார்களாம். கட்சி ஆரம்பித்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும், மற்ற கட்சிகளின் பணநாயகத்துக்கிடையே தாக்குப்பிடித்து நிற்பது ஒரு வகையில் சாதனைதான். எளிதில் உணர்ச்சி வசப்படுபவராக, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத இளிச்சவாயராக அரசியல் நடத்தி போட்டியிட்டுக் கொண்டு வெளியில் வந்த தி மு கழகத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தவருக்கு புத்துயிர் அளிப்பதாக அரசியல் சீர்திருத்தங்கள் வந்து சேர்ந்தன. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் பேசி முடித்த பிறகு நாடாளுமன்ற மக்களவையில் நடக்கும் விவாதத்தையும் வாக்கெடுப்பையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சீனாவில் நடக்கும் உள்நாட்டு போராட்டத்தைக் குறித்த விவாதம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா என்ன முடிவெடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கும் அமர்வு. யார் யார் எப்படி வாக்களிப்போகிறார்கள் என்று முடிவு செய்வதற்கு முன்பு ஒவ்வொரு தரப்பிலிருந்தும் இரண்டிரண்டு பேர் பேசினார்கள்.

அமெரிக்காவைச் சார்ந்த தாய்வானிலிருந்து செயல்பட்டு வந்த தேசியக் கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு, பெய்ஜிங்கிலிருந்து நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டு வரும் கம்யூனிஸ்டு கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பு, தேசிய ஆட்சி ஒன்றை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்பு சட்டம் வகுத்து அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று மூன்றாவது தரப்பு. அரை மணி நேரத்தில் விவாதங்கள் முடிந்தன. முதலில் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு. ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் தனது தேர்வை குறிப்பிட்டதும், அவர்களது தொகுதி, தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, இவர் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை என்று பட்டியல் வளர்ந்து கொண்டே போனது.

அடுத்த 1 மணி நேரத்தில் பொது வாக்கெடுப்பு நடக்கும். தமது தொகுதி உறுப்பினர் அளித்த வாக்கை ஏற்றுக் கொள்ளாதவர்கள், தமது வாக்கை மாற்றி அளிக்கலாம். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலிருந்து மாற்று வாக்குகளைக் கழித்து விட்டு உறுப்பினரின் வாக்கின் மதிப்பை எடுத்துக் கொள்வார்கள்.

தினசரி நடக்கும் வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ள யாருக்கும் நேரமும் விருப்பமும் இருப்பதில்லை. உறுப்பினரின் முடிவில் ஒரு சில வாக்குகள் மட்டுமே மாற்றாக பதிவாகும். இது போன்று முக்கியமான நேரங்களில், பங்கெடுப்பு பல ஆயிரங்களாக, சில நேரங்களில் பாதிக்கும் அதிகமாகக் கூடப் போக நேரிடும். எந்த முடிவையும் ஒவ்வொரு வயது வந்த வாக்காளரும் தீர்மானிக்கும் உரிமை தொழில்நுட்பத்தின் சாதனை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலில் பணத்தை வாரி இறைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கேட்பார் யாருமின்றி தனது ஆதாயத்துக்கு பணம் சம்பாதிக்கும் அரைகுறை மக்களாட்சியிலிருந்து வெகு தூரம் வந்து விட்டிருக்கிறோம்.

0 Comments:

Post a Comment

<< Home