Sunday, May 24, 2009

2020-05-24

மே மாதம் 24ம் தேதி. மாலை மணி 6.11

முன்பெல்லாம் flexi-timings என்று நிறுவனங்களில் ஒரு முறையை செயல்படுத்துவதைப் பற்றி பெரிதாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்தே வேலைகளைப் பார்த்துக் கொள்வது, தேவைப்படும் போது மட்டும், முக்கியமாக குழு சந்திப்புகள், விவாதங்களுக்கு மட்டும் அலுவலகத்துக்கு வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் வருவது என்று நடைமுறை பேசப்பட்டு வந்தது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் போது என்னென்ன சிக்கல்கள் வரும் அவற்றை எப்படிக் கையாளுவது என்பது ஒரு பெரிய தடையாக இருந்தது.

ஒரு பொத்தானைத் தட்டினால் 'நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், அடுத்தவர்கள் நம்மை அணுகலாமா' என்று வெளிப்படுத்திக் கொள்ளலாம். நமது வேலை திரையை, நமது உருவத்தை மற்றவர்கள் பார்க்கலாமா என்று அமைத்துக் கொள்ளலாம். அதைப் போல யார் யார் எங்கெங்கு என்னென்ன வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று மூன்றாவது திரையின் வலது ஓரத்தில் பார்த்துக் கொள்ளலாம். சுஜாதா இணையத்தை அறிமுகம் செய்து எழுதிய புத்தகத்தின் தலைப்பைப் போல உலகம் உண்மையிலேயே வீட்டுக்குள்ளேயே வந்து விடுகிறது.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை பார்த்தால் மட்டும் போதாது, அந்த எட்டு மணி நேரத்தில் குறைந்தது 6 மணி நேரம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு அவர்கள் அணுகும் நிலையில் இருக்க வேண்டும் என்று நெறி வகுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தூங்கும் நேரம் 6 மணிகள், அதிகாலை 4 மணிகள், மாலையில் இரண்டு மணி நேரம் தவிர வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் எனது விருப்பம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. வித்யா சரியாக 6 மணி நேரத்துக்கு மேல் ஒரு நிமிடம் கூட பொது இணையத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. என் வாழ்க்கையை எனது சுயத்தை வைத்துக் கொள்வது எனது உரிமை என்று அவளது வாதம். அதுவும் சரிதான்.

இப்படி எழுதும் போது கணினித் திரை மற்றவர்களுக்குக் காட்டுவதில்லை. தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தகவலையும் போட்டு விட்டால், புருவங்கள் முடிச்சிட நான் உட்கார்ந்திருப்பதை, நிறுவன சகாக்களும், உறவினர்களும், நண்பர்களும் - இணைப்பில் உள்ள, அணுகல் கொடுத்துள்ளவர்கள் - பார்த்துக் கொள்ளலாம். அப்படிப் பார்ப்பது நம்ம இமேஜை பலப்படுத்தும் என்று ஒரு நம்பிக்கை. எழுதியதை பதிப்பதற்கு முன்பு 24 மணி நேரமாவது இடைவெளி கொடுக்க வேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டேன். மற்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும் வாக்கியங்களில் பல மடங்கு கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

மதிய உணவுக்கு எல்லோரும் வீட்டில் சந்திக்க வேண்டும் என்பது வீட்டு விதிமுறை. நேற்றைக்கு மதி தனது கருத்தரங்கை முடித்து விட்டு வந்து விட, கார்த்திக் தனது அடுத்த வடிவமைப்பு முடித்து விட்டதாகச் சொன்னான். வித்யாவின் 3 மணி சந்திப்பு வரை எல்லோரும் நிதானமாகச் சாப்பிட்டு பேசிக் கொண்டிருந்தோம். கலை, ராகவ், சுசீலா, தனஞ்சய், கண்ணன், சின்ஹா எல்லோரும் மேசைக்கு வந்து விட்டார்கள். மதியின் பேச்சு குறித்து எல்லோரும் ஒரு வார்த்தை கேட்டு விட்டார்கள்.

சின்ன வயதில் அவ்வளவு சண்டை போட்ட, அவ்வளவு சிணுங்கிய தனது தங்கை இப்படி ஆயிரக்கணக்கான பேரின் கவனத்தை ஈர்க்கும் கருத்தரங்கில் பேசியது கார்த்திக்கு பெருமையாக இருந்திருக்கிறது. வெளிப்படையாக வாய் விட்டு பாராட்டினான். மதியின் உரையை விண்வெளி கழகத்தின் இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் சுட்டி கொடுத்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் 300 மில்லியன்களுக்கும் அதிகமான பேர் படித்திருக்கிறார்கள். இனிமேல் இந்தப் பெண்ணைக் கையில் பிடிக்க முடியாது. அவளே வழக்கம் போல தனது ஐஸ்கிரீம் வேட்டையில்தான் கவனமாக இருந்தாள்.

'உனது கருத்துக்களுக்குக் கிடைத்திருக்கும் மதிப்பைப் பார்த்தாயா! இனிமேல் பேசும் போதும் எழுதும் போதும் கவனமாக இருக்க வேண்டும். நீ என்ன சொன்னாலும், அதைப் படிப்பதற்கு ஒரு கூட்டமே காத்திருக்கும். அந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது எளிதான வேலை கிடையாது'

அந்த நேரத்தில் அழைப்பு மணி அழைக்கும் ஓசை. அஷ்வினா. இரண்டு வாண்டுகளுடன் உள்ளே வந்தாள். மதிய உணவுக் கூடம் கலகலப்பாக இருப்பது வித்யாவுக்கு மிகவும் பிடித்த ஒன்று. வெண்டைக்காய் பொரியலும், தக்காளி பச்சடியும் சர சரவென்று உள்ளே போய்க் கொண்டிருந்தன.

அஷ்வினா அவர்கள் வீட்டில் விளைந்த மாம்பழங்களை ஒரு கூடை கொண்டு வந்திருந்தாள். அதை மாம்பழம் வெட்டும் எந்திரத்தில் போட்டு துண்டு துண்டுகளாக வெளியில் எடுத்து விட்டான் கார்த்திக். இப்படி எந்திரங்கள் வடிவமைப்பதில் வித்தகனாக இருக்கிறான். 'மாம்பழம் வெட்டுவதுக்குன்னு ஒரு எந்திரம் செய்தால் அது எத்தனை பேருக்கு பயன்படும், எதுக்கு நேரத்தை வீணாக்குகிறாய்' என்று அடாவடி கூட செய்து பார்த்து விட்டேன். 'எனக்குக் கண்ணில் பட்ட தேவைக்கு நான் விடை உண்டாக்குகிறேன். அது இன்னொருவருக்கு எப்படி பயன்படும் என்று என்னால் எல்லா கோணங்களிலும் சிந்திக்க முடியாவிட்டாலும், அவரவர் தமக்குத் தேவைப்படி பயன்படுத்திக் கொள்வார்கள். நான் இதை உருவாக்காமலே இருந்தால் அது எல்லாம் கிடைத்திருக்காமல்தானே போகும். துணி துவைக்கும் எந்திரத்தை லஸ்சி செய்யப் பயன்படுத்திய கதை எல்லாருக்கும் தெரிந்ததுதானே' இவர்களிடம் பேசி ஜெயித்து விட முடியாதுதான்.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home